"சண்டைக்கு வர்றியா, தொண்டையை அறுத்துடுவேன்" போலீசுக்கு சவால் விட்ட ரவுடி

0 11369
சென்னையில் ரௌடி ஒருவன் கஞ்சா போதையுடன் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலர் ஒருவரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் ரௌடி ஒருவன் கஞ்சா போதையுடன் காவல் நிலையத்துக்குள் புகுந்து காவலர் ஒருவரை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

சென்னை அபிராமபுரம் பகுதியைச் சேர்ந்தவன் கார்த்தி என்கிற பிச்சைக்கார்த்தி. தன்னை பெரிய ரௌடியாக நினைத்துக் கொண்டு திரியும் பிச்சை கார்த்தி மீது ஏராளமான வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு அபிராமபுரம் காவல் நிலையத்துக்குள் கஞ்சா போதையுடன் புகுந்த பிச்சைகார்த்தி, அங்கு பணியிலிருந்த காவலர் சதீஷ்குமார் என்பவரை ஒருமையில் ஆபாசமாகப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுத்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

கையில் பிளேடு ஒன்றை வைத்துக் கொண்டு காவலர் சதீஷ்குமாரை சண்டைக்கு இழுத்த கார்த்தி, அவ்வப்போது மற்ற காவலர்களை சுட்டிக்காட்டி, அவர்கள் எல்லோரும் தனது அண்ணன் தான் என சினிமா வசனம் பேசி கட்டிப்பிடிக்க முயன்றான்.

கஞ்சா போதையில் இருந்த பிச்சைக்கார்த்தி தன் கையில் பிளேடு ஒன்றையும் வைத்திருந்ததால், விபரீதமாக ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக நிதானத்தைக் கையாண்ட சக காவலர்கள், அங்கிருந்து அவனை வெளியேற்றுவதில் முனைப்பு காட்டினர். ஆனால் அவர்களது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாத கார்த்தி, தொடர்ந்து காவலர் சதீஷ்குமாரை வம்புக்கு இழுப்பதிலேயே குறியாக இருந்தான்.

6 மாதங்களுக்கு முன் இதே பிச்சை கார்த்தி இதே காவல் நிலையத்துக்குள் இரவில் கஞ்சா போதையில் புகுந்து, காவலர்களுக்கு வைத்திருந்த உணவினை சாப்பிட்டுவிட்டு சென்றான் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உயரதிகாரிகளின் உத்தரவுப்படி கார்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments